மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் |
3. திருஅண்டப் பகுதி |
தில்லையில் அருளியது |
சிவனது தூல சூக்குமத்தை வியந்தது |
இணைக் குறளாசிரியப்பா |
அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்த
இன்னுழை கதிரின் துன்அணுப் புரையச் |
5 |
சிறிய வாகப் பெரியோன் தெரியின்
வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்
தோற்றமுஞ் சிறப்பும் ஈற்றொடு புணரிய
மாப்பே ரூழியும் நீக்கமும் நிலையும்
சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து |
10 |
எறியது வளியிற்
கொட்கப் பெயர்க்குங் குழகன் முழுவதும்
படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை
காப்போற் காக்குங் கடவுள் காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக் |
15 |
கருத்துடைக் கடவுள் திருத்தகும்
அறுவகைச் சமயத் தறுவகை யோர்க்கும்
வீடுபே றாய்நின்ற விண்ணோர்பகுதி
கீடம் புரையுங் கிழவோன் நாள்தொறும்
அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு |
20 |
மதியில் தண்மை வைத்தோன் திண்டிறல்
தீயின் வெம்மை செய்தோன் பொய்தீர்
வானிற் கலப்பு வைத்தோன் மேதகு
காலின் ஊக்கங் கண்டோன் நிழல்திகழ்
நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட |
25 |
மண்ணில் திண்மை வைத்தோன் என்றென்று
எனைப்பல கோடி யெனைப்பல பிறவும்
அனைத்தனைத் தவ்வயின் அடைத்தோன் அஃதான்று
முன்னோன் காண்க முதுதோன் காண்க
தன்னே ரில்லோன் தானே காண்க |
30 |
ஏனத் தொல்லெயி றணிந்தோன் காண்க
கானப் புலியுரி அரையோன் காண்க
நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்
ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்
இன்னிசை வீணையி லிசைந்தோன் காண்க |
35 |
அன்னதொன் றவ்வயின் அறிந்தோன் காண்க
பரமன் காண்க பழையோன் காண்க
பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க
அற்புதன் காண்க அநேகன் காண்க
சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க |
40 |
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க
பத்தி வலையிற் படுவோன் காண்க
ஒருவன் என்னும் ஒருவன் காண்க
விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க
அணுத்தருந் தன்மையில் ஐயோன் காண்க |
45 |
இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க
அரியதில் அரிய அரியோன் காண்க
மருவியெப் பொருளும் வளர்ப்போன் காண்க
நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க
மேலொடு கீழாய் விரிந்தோன் காண்க |
50 |
அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க
யாவரும் பெறவுறும் ஈசன் காண்க |
55 |
தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலியெனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானுங் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க |
60 |
புவனியிற் சேவடி தீண்டினன் காண்க
சிவனென யானுந் தேறினன் காண்க
அவனெனை ஆட்கொண் டருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க |
65 |
பரமா னந்தப் பழங்கட லதுவே
கருமா முகிலில் தோன்றித்
திருவார் பெருந்துறை வரையி லேறித்
திருத்தகு மின்னொளி திசைதிசை விரிய
ஐம்புலப் பந்தனை வாளர விரிய |
70 |
வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப
நீடெழில் தோன்றி வாளொளி மிளிர
எந்தம் பிறவியிற் கோபம் மிகுந்து
முரசெறிந்து மாபெருங் கருணையில் முழங்கிப்
பூப்பரை அஞ்சலி காந்தள் காட்ட |
75 |
எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்
செஞ்சுடர் வெள்ளந் திசைதிசை தெவிட்ட வரையுறக்
கேதக் குட்டங் கையற வோங்கி
இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை
நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் |
80 |
தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்
அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன
ஆயிடை வானப் பேரியாற் றகவயின்
பாய்ந்தெழுந் தின்பப் பெருஞ்சுழி கொழித்துச்
சுழித்தெம் பந்தமாக் கரைபொரு தலைத்திடித்து |
85 |
ஊழுழ் ஓங்கிய நங்கள்
இருவினை மாமரம் வேர்ப றித்தெழுந்து
உருவ அருள்நீர் ஒட்டா அருவரைச்
சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்
வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் |
90 |
மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்
மீக்கொள மேன்மேன் மகிழ்தலின் நோக்கி
அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத்
தொண்ட உழவ ராரத் தந்த
அண்டத் தரும்பெறல் மேகன் வாழ்க |
95 |
கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க
அருந்தவர்க் கருளும் ஆதி வாழ்க
அச்சந் தவிர்த்த சேவகன் வாழ்க
நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க
சூழிருந் துன்பந் துடைப்போன் வாழ்க |
100 |
எய்தினர்க் காரமு தளிப்போன் வாழ்க
கூரிருட் கூத்தொடு குனிப்போன் வாழ்க
பேரமைத் தோளி காதலன் வாழ்க
ஏதிலர்க் கேதிலெம் இறைவன் வாழ்க
காதலர்க் கெய்ப்பினில் வைப்பு வாழ்க |
105 |
நச்சர வாட்டிய நம்பன் போற்றி
பிச்செமை யேற்றிய பெரியோன் போற்றி
நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி, நாற்றிசை
நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்
நிற்பன நிறீஇச் |
110 |
சொற்பதங் கடந்த தொல்லோன்
உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்
கண்முதற் புலனாற் காட்சியும் இல்லோன்
விண்முதற் பூதம் வெளிப்பட வகுத்தோன்
பூவின் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் |
115 |
ஒழிவற நிறைந்து மேவிய பெருமை
இன்றெனக் கெளிவந் தருளி
அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்
இன்றெனக் கெளிவந் திருந்தனன் போற்றி
அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி |
120 |
ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி
ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்
போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்
மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்
மின்னொளி கொண்ட பொன்னொளி திகழத் |
125 |
திசைமுகன் சென்று தேடினர்க் கொளித்தும்
முறையுளி யொற்றி முயன்றவர்க் கொளித்தும்
ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து
உற்றவர் வருந்த உரைப்பவர்க் கொளித்தும்
மறைத்திறம் நோக்கி வருந்தினர்க் கொளித்தும் |
130 |
இத்தந் திரத்திற் காண்டுமென் றிருந்தோர்க்கு
அந்தத் திரத்தின் அவ்வயின் ஒளித்தும்
முனிவற நோக்கி நனிவரக் கௌவி
ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து
வாள்நுதற் பெண்ணென ஒளித்துஞ் சேண்வயின் |
135 |
ஐம்புலன் செலவிடுத் தருவரை தொறும்போய்த்
துற்றவை துறந்த வெற்றுயி ராக்கை
அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்
ஒன்றுண் டில்லை யென்றறி ஒளித்தும்
பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் |
140 |
ஒளிக்குஞ் சோரனைக் கண்டனம்
ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலில்
தாள்தளை யிடுமின்
சுற்றுமின் சூழ்மின் தொடர்மின் விடேன்மின்
பற்றுமின் என்றவர் பற்றுமுற் றொளித்தும் |
145 |
தன்னே ரில்லோன் தானே யான தன்மை
என்னே ரனையோர் கேட்கவந் தியம்பி
அறைகூவி ஆட்கொண் டருளி
மறையோர் கோலங் காட்டி யருளலும்
உளையா அன்பென் புருக வோலமிட்டு |
150 |
அலைகடற் றிரையின் ஆர்த்தார்த் தோங்கித்
தலைதடு மாறா வீழ்ந்துபுரண் டலறிப்
பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து
நாட்டவர் மருளவுங் கேட்டவர் வியப்பவும்
கடக்களி றேற்றாத் தடப்பெரு மதத்தின் |
155 |
ஆற்றே னாக அவயவஞ் சுரைதரு
கோற்றேன் கொண்டு செய்தனன்
ஏற்றார் மூதூர் எழில்நகை யெரியின்
வீழ்வித் தாங்கன்று
அருட்பெருந் தீயின் அடியோம் அடிக்குடில் |
160 |
ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்
தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்
சொல்லுவ தறியேன் வாழி முறையோ
தரியேன் நாயேன் தானெனைச் செய்தது
தெரியேன் ஆவா செத்தேன் அடியேற்கு |
165 |
அருளிய தறியேன் பருகியு மாரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரைபுரைவித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகந் ததும்ப
வாக்கிறந் தமுதம் மயிர்க்கால் தோறும் |
170 |
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை
குரம்பை தோறும் நாயுட லகத்தே
குரம்பைகொண் டின்தேன் பாய்த்தினன் நிரம்பிய
அற்புத மான அமுத தரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது |
175 |
உள்ளங் கொண்டோர் உருச்செய் தாங்கெனக்கு
உள்ளூ றாக்கை யமைத்தனன் ஒள்ளிய
கன்னற் கனிதேர் களிறெனக் கடைமுறை
என்னையும் இருப்ப தாக்கினன் என்னிற்
கருணை வான்தேன் கலக்க |
180 |
அருளொடு பராவமு தாக்கினன்
பிரமன்மா லறியாப் பெற்றி யோனே. |
182 |
திருச்சிற்றம்பலம் |